சுடச்சுட

  

  அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்: பயணிகள் வேதனை

  By DIN  |   Published on : 13th March 2017 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மண்டலத்தில் அரசுப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக செய்யாறு பகுதியில் நகரப் பேருந்துகளில் (டவுன் பஸ்) குறைந்த பட்சக் கட்டணம் ரூ.3-க்கும் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது.
  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டத்தில் அமைந்துள்ளது திருவண்ணாமலை மண்டலம். இந்த மண்டலத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, போளூர், செங்கம், சேத்பட், வந்தவாசி, கோயம்பேடு என 11 பணிமனைகள் உள்ளன. இந்த மண்டலத்தில் நகர்ப்புற பேருந்துகள் 131, புறநகர் பேருந்துகள் 446 என சுமார் 620 பேருந்துகள் உள்ளன.
  கட்டண விவரம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஒரு கிலோ மீட்டருக்கு சாதாரண பேருந்துகளில் 42 பைசா, எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் 56 பைசா, டிஎஸ்எஸ் பேருந்துகளில் 60 பைசா, அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் 70 பைசா வீதம் பேருந்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  திருவண்ணாமலை மண்டலம்: திருவண்ணாமலை மண்டலத்தில் உள்ள 11 பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகளிலும் சாதாரண கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. மாறாக பழைய பேருந்துகளில் எக்ஸ்பிரஸ், டிஎஸ்எஸ் என ஸ்டிக்கர் ஒட்டி பேருந்து பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் கூறுகின்றனர். அரசிடம் முறையாக அனுமதி பெறாமல் போக்குவரத்து மண்டல அலுவலர்கள் பேருந்து பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளனராம்.
  சாதாரண கட்டண பேருந்துகள் இல்லை: செய்யாறு அரசுப் போக்குவரத்து பணிமனையில் இருந்து நகரப் பேருந்துகள் 19-ம், புறநகர் பேருந்துகள் 47-ம் என மொத்தம் 60-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், திருவண்ணாமலை என பல பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
  இவைகளில் சாதாரணப் பேருந்துகளில் செய்யாறு - காஞ்சிபுரத்துக்கு ரூ.14-ம், செய்யாறு - சென்னைக்கு ரூ.48-ம் வசூலிக்க வேண்டும். ஆனால், செய்யாறு பணிமனையில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகளிலும் செய்யாறு - காஞ்சிபுரத்துக்கு குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.18, ரூ.20, ரூ.22 என வசூலிக்கப்படுகிறது. அதேபோல, சென்னைக்கு குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.64, 70, 80 வீதம் வசூலிக்கப்படுகிறது.
  இதேபோல, ஆரணி - சென்னை, திருவண்ணாமலை - சென்னை, போளூர் - சென்னை, செங்கம் - சென்னை என செய்யாறு, காஞ்சிபுரம் வழியாகச் செல்லும் சாதாரணப் பேருந்துகளில் பெரும்பாலானவற்றில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
  திருவண்ணாமலை மண்டலத்தில் நகரப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணத் தொகை ரூ.3 வசூலிக்கப்படுவதே இல்லை. மாறாக ரூ.4 தான் வசூலிக்கப்படுகிறது. அதே போன்று, புறநகர் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.5-க்கு பதிலாக எக்ஸ்பிரஸ் பேருந்து கட்டணமாக ரூ.7 வீதம் வசூலிக்கப்படுகிறது. அரசுப் பேருந்துகளை பின்பற்றி தனியார் பேருந்துகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
  தனியார் பேருந்துகளுக்கு சாதகமாக...: செய்யாறு பணிமனையில் இருந்து தடம் எண்.86 செய்யாறு - திண்டிவனம் - வேலூர், தடம் எண்.157 செய்யாறு -மகாபலிபுரம், தடம் எண்.280 செய்யாறு - பிராட்வே ஆகிய அரசுப் பேருந்துகள் சரியாக இயக்கப்படாமல் அந்தத் தடங்களை நிறுத்தியே விட்டதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதே போன்று தடம் எண்.205 வேலூர் - செய்யாறு - புதுச்சேரி செல்லும் பேருந்தையும் சரியாக இயக்காமல் வருவாய் இல்லாமல் செய்து வருகின்றனர் என்றும் புகார் கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் செய்யாறு பகுதி மக்கள், சாதாரண, பழுதடைந்த பேருந்துகளில் அதிக கட்டணம் அளித்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

  "மேலிட உத்தரவுப்படியே கட்டண வசூல்'
  பேருந்து கட்டண விவரம், நிறுத்தப்பட்ட பேருந்துகளின் விவரம் குறித்து கேட்டபோது, செய்யாறு பணிமனை கிளை மேலாளர் விநாயகம் கூறியதாவது:
  சாதாரணப் பேருந்துகளில் சாதாரண கட்டணமும், எகஸ்பிரஸ் பேருந்துகளில் எக்ஸ்பிரஸ் கட்டணமும் மேலிட உத்தரவுப்படி வசூலிக்கப்படுகிறது. தடம் எண்.86 செய்யாறு - திண்டிவனம் - வேலூர், தடம் எண்.157 செய்யாறு -மகாபலிபுரம், தடம் எண்.280 செய்யாறு - பிராட்வே ஆகிய பேருந்துகள் பணியாளர் பற்றாக்குறை காரணமாகவும், மேலிட உத்தரவுப்படியும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai