சுடச்சுட

  

  முடங்கிக் கிடக்கும் சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டி: விவசாயிகள் கவலை

  By DIN  |   Published on : 15th March 2017 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளுக்கு ரூ.ஒரு கோடியே 50 லட்சம் பாக்கித் தொகை நிலுவையில் உள்ளதால், கடந்த 30 நாள்களாக கமிட்டி முடங்கிக் கிடப்பதால் சுமார் 250 கூலித் தொழிலாளர்கள் வேலையின்றித் தவித்து வருகின்றனர்.
  சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டி நெல் மற்றும் மணிலா கொள்முதல் செய்வதில் மாவட்டத்தில் தொடர்ந்து முதலிடம் பெற்று வந்தது. இந்த நிலையில், சில வியாபாரிகள் கமிட்டி கண்காணிப்பாளர் ஒத்துழைப்போடு விவசாயிகளின் பணத்தை  பல மாதங்களாகியும் தராமல் அலைக்கழித்து வந்தனர்.
  இதில் வியாபாரி கார்த்தி, அவருடைய தந்தை சீனு, தம்பி கண்ணன் ஆகிய 3 பேரும் 240 விவசாயிகளிடையே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து ரூ. ஒரு கோடியே 50 லட்சம் பணம் தராமல் ஏமாற்றினராம்.
  விவசாயிகள்  இதுகுறித்து கமிட்டி கண்காணிப்பாளர், செயலாளரிடம் முறையிட்டனர். நடவடிக்கை இல்லாததால் கடந்த மாதம் 9ஆம் தேதி விவசாயிகள்
  தங்களது எதிர்ப்பை சாலை மறியல் மூலமாக தெரியப்படுத்தினர்.
  இதற்கும் கமிட்டி நிர்வாகம் செவி சாய்க்காததால் விவசாயிகள் ஒன்று திரண்டு கடந்த 13ம் தேதி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
  இதனைத் தொடர்ந்து ஆட்சியர் பிரசாந்த் வடநேரே சம்பந்தப்பட்டவர்களை அழைத்து  விசாரணை செய்தார். பின்னர் விவசாயிகளுக்கு சேர வேண்டிய தொகையை  வரும் மார்ச் மாதம் 8ம் தேதிக்குள் தினமும் சிறுக, சிறுக வழங்கவேண்டும் என உத்திரவிட்டார்.
  இதனை கமிட்டி அதிகாரிகளும், வியாபாரிகளும் அலட்சியமாக கருதி செயல்படுத்தவில்லை. இதனால் விவசாயிகள் தினம் ஒரு போராட்டம் நடத்தி கடைசியாக பூட்டு போடும் போராட்டம்  நடத்தி கமிட்டியை முடக்கினர்.
   இதன் எதிரொலியாக வியாபாரி கார்த்தி, கண்காணிப்பாளர் ராஜசேகர் ஆகிய இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து தலைமறைவாக உள்ள சீனு, கண்ணன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
   அன்று முதல் விவசாயிகள் தங்களது பணத்திற்காக கமிட்டிக்கு நடையாய் நடக்கின்றனர். ஊழியர்களிடம் கேட்டால் மாவட்ட ஆட்சியரை பாருங்கள் என தெரிவிக்கின்றனர்.
  இப்பகுதி விவசாயிகள்  வந்தவாசி, தேசூர், செஞ்சி, செய்யாறு, ஆரணி ஆகிய மார்க்கெட் கமிட்டிகளுக்கு விளை பொருள்களை எடுத்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
  எனவே, விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள்  நலன் கருதி விவசாயிகளுக்கு தரவேண்டிய பணத்தை உடனே வழங்கவும் கடந்த ஒரு மாதமாக, முடங்கிக் கிடக்கும் கமிட்டியை திறக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai