Enable Javscript for better performance
கடினமாக உழைத்தால் எந்தத் துறையாக இருந்தாலும் வெற்றி பெறலாம்: நீதிபதி எஸ்.பத்மநாதன்- Dinamani

சுடச்சுட

    

    கடினமாக உழைத்தால் எந்தத் துறையாக இருந்தாலும் வெற்றி பெறலாம்: நீதிபதி எஸ்.பத்மநாதன்

    By DIN  |   Published on : 16th March 2017 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடினமாக உழைத்தால் எந்தத் துறையாக இருந்தாலும் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மநாதன் அறிவுரை வழங்கிப் பேசினார்.
    திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் சாதனையாளர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
    விழாவுக்கு, கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் வி.ராமநாதன், பதிவாளர் ர.சத்தியசீலன், செயலர் எம்.புர்க்கிந்த்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முதல்வர் ஜி.மோகன்குமார் வரவேற்றார். மதுரை உயர்நீதிமன்ற சார்பு நீதிபதி எஸ்.பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கிப் பேசினார். அப்போது அவர் கூறியது: நாம் அனைவரும் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் தொழில்முறை கல்வி படிப்பதையே பெருமையாக கருதுகிறோம்.
    ஆனால், எந்தப் படிப்பைப் படித்தாலும் முழு முயற்சி, ஈடுபாட்டுடன் படித்தால் அந்தத் துறையில் நம்மால் கண்டிப்பாக சாதிக்க முடியும். நான்கூட பிளஸ் 2 முடித்த பிறகு பொறியியல் படிக்க ஆசைப்பட்டேன். ஆனால், கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கவில்லை.
    வேறு வழியின்றி, நான் பொருளாதாரம் எடுத்தபோது எல்லோரும் என்னை கிண்டல் செய்தனர். இப்போது ஒரு நீதிபதியானதும் எல்லோரும் என்னைப் பார்த்து பெருமைப்படுகிறார்கள்.
    எனவே, படிப்புக்கும், வளர்ச்சிக்கும் சம்பந்தமே கிடையாது. நாம் கஷ்டப்பட்டு உழைத்தால், நிச்சயம் எந்தத் துறையாக இருந்தாலும் வெற்றி பெறலாம். எனவே, மாணவ-மாணவிகள் எந்தத் துறையை தேர்வு செய்து படித்தாலும் முழு ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும். எந்த வேலை செய்தாலும் முழு மனதுடன், ஆர்வத்துடன் வேலை செய்ய வேண்டும் என்றார்.
    தொடர்ந்து, சென்னை அப்போலோ மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் எம்.ஆர்.கிரிநாத், சென்னை ஐஐடியின் வேதியியல் துறை பேராசிரியர் ஷங்கர் நரசிம்மன், தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை விளையாட்டு மருத்துவ சிறப்பு நிபுணர் கண்ணன் புகழேந்தி, புதுச்சேரி வோலோன்டரியட் நிறுவனத்தின் நிறுவனர் மாடேலின் டி.பிலிக் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
    இதையடுத்து, பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 132 மாணவ-மாணவிகளுக்கு நீதிபதி எஸ்.பத்மநாபன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.  விழாவில், கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai