சுடச்சுட

  

  தில்லியில் தமிழக மாணவர் மர்மச் சாவு: திருவண்ணாமலை, போளூரில் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 18th March 2017 07:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த சேலம் மாணவர் முத்துக்கிருஷ்ணனின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி, திருவண்ணாமலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  இந்திய மாணவர் சங்கத்தின் திருவண்ணாமலை அரசுக் கல்லூரி கிளை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவர் நந்தினி தலைமை வகித்தார். செயலர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் ந.அன்பரசன், மாநிலக் குழு உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் பேசினர்.
  முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் உள்ள மர்மங்கள் விலக வேண்டுமெனில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அவரது குடும்பத்துக்கு மத்திய அரசு ரூ.25 லட்சம் பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும். முத்துக்கிருஷ்ணனின் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
  இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சுமார் ஒரு மணி நேர ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்குத் திரும்பினர்.
  தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்: இதேபோல, மாணவர் முத்துக்கிருஷ்ணனின் மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி, போளூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் செல்வம் தலைமை வகித்தார்.  இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai