சுடச்சுட

    

    மழை வேண்டி வன போஜன விழா: இந்திரவனம் கிராமத்தில் நடைபெற்றது

    By DIN  |   Published on : 18th March 2017 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் கிராமத்தில் மழை வேண்டி வியாழக்கிழமை வன போஜன விழா மற்றும் சிறப்புப் பூஜைகளை அந்தப் பகுதி மக்கள் செய்தனர்.
    சேத்துப்பட்டு - ஆரணி நெடுஞ்சாலையில் உள்ள இந்திரவனம் கிராமத்தில் ஆண்டுதோறும் கிராமம் செழிப்பாக இருக்கவும், மழை வேண்டியும், கால்நடைகள், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும் வனபோஜன விழா நடப்பது வழக்கம்.
    அதேபோல, இந்த ஆண்டு நடைபெற்ற விழாவையொட்டி, விநாயகர், பெருமாள், கிராம தேவதைகளுக்கு சிறப்பு தீபாரதனை செய்து, வீட்டை பூட்டிவிட்டு, பொங்கல் கூடை, பாய், தலையணை, துடைப்பம், தங்களது செல்லப்பிராணிகளான ஆடு, மாடு, கோழி, நாய் போன்றவற்றை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள வன தேவதை குளக்கரைக்கு பொதுமக்கள் சென்றனர்.
    காலை முதல் இரவு வரை அங்கு தங்கி, பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக பொங்கல் வைத்தும், மாவிளக்கு போட்டும் வன தேவதைக்கு படையலிட்டு, மழை வேண்டி சிறப்புப் பூஜைகள் செய்தனர்.
    பின்னர், கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பொதுவாக சமைக்கப்பட்ட உணவை உண்டு மகிழ்ந்தனர். இரவு அலங்கரிக்கப்பட்ட வன தேவதை, மாரியம்மன், பொன்னியம்மன், விநாயகர் சுவாமிகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக ஊருக்குள் அழைத்து வந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai