சுடச்சுட

  

  ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட அதிமுகவை வெறும் 150 பேர் சேர்ந்து கொண்டு அழித்துவிடலாம் என்று நினைக்கின்றனர். அது நடக்காது என்று அதிமுகவின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் பேசினார்.
  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருவண்ணாமலை அண்ணா சிலை எதிரே சனிக்கிழமை நடைபெற்றது. தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன் தலைமை வகித்தார்.
  இதில், துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, நீங்கள்தான் தமிழக முதல்வராக இருக்க வேண்டும் என்று சசிகலாவிடம் கூறியவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், தனக்கு எந்த பதவியும் வேண்டாம். நீங்களே அம்மாவின் ஸ்தானத்தில் இருந்து ஆட்சியைத் தொடருங்கள் என்று ஆட்சிப் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்தார் சசிகலா. ஆனால், ஸ்டாலினுடன் ரகசியத் தொடர்பு வைத்துக்கொண்டதால் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.
  ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரைப் பற்றி எதுவுமே பேசாத ஓ.பன்னீர்செல்வம், தனக்கு முதல்வர் பதவி போய்விட்ட பிறகு, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறி மக்களை திசை திருப்புகிறார்.
  ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட அதிமுகவை வெறும் 150 பேர் சேர்ந்து கொண்டு அழித்துவிடலாம் என்று நினைக்கின்றனர். அது நடக்காது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது மார்ச் 22-ஆம் தேதி தெரிந்து விடும்.
  அதிமுகவின் பெரும்பான்மையான செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உள்ள நமக்குத்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அன்றிலிருந்து பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகும்.
  ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வந்தால், அதை நாங்கள் வரவேற்கிறோம். எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை.
  ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 73 நாள்களாக முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். எனவே, சிபிஐ விசாரணை வந்தால் முதல் குற்றவாளியும், முதலில் தண்டிக்கப்பட வேண்டியவரும் அவர்தான். ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவது உறுதி என்றார்.
  இதைத் தொடர்ந்து, ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை டி.டி.வி.தினகரன் வழங்கினார். கூட்டத்தில், ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai