சுடச்சுட

  

  மூடப்பட்ட வங்கியை மீண்டும் திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 20th March 2017 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செய்யாறு அருகே உள்ள ஆக்கூர் கிராமத்தில் மூடப்பட்ட இந்தியன் வங்கிக் கிளையை மீண்டும் திறக்கக் கோரி, கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  செய்யாறு வட்டம், ஆக்கூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், அஞ்சல் நிலையம், மின்வாரிய அலுவலகம், கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு கடை உள்ளிட்டவை உள்ளன.
  ஆக்கூர் கிராமத்துக்கு அருகே சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் செய்யாறு சிப்காட் பகுதி அமைந்துள்ளது. மேலும், இந்தக் கிராமத்தைச் சுற்றிலும் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
  ஆக்கூர் கிராமத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த இந்தியன் வங்கிக் கிளையை கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு நிர்வாக காரணங்களுக்காக இந்த வங்கிக் கிளை மூடப்பட்டதாகத் தெரிகிறது.
  இதையடுத்து, இந்தப் பகுதியில் வங்கி இல்லாததால் மாணவர்கள், தொழிலாளர்கள், முதியோர் உதவித்தொகை பெறுவோர், சிப்காட் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் செய்யாறு, காஞ்சிபுரம், மாமண்டூர், வெம்பாக்கம், வந்தவாசி ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கால விரயமும், கூடுதல் பணச் செலவும் ஏற்படுகிறது.
  இது போன்ற பல்வேறு காரணங்களால் இந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அவதிப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, மூடப்பட்ட இந்தியன் வங்கிக் கிளையை மீண்டும் திறக்க இந்தியன் வங்கி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் ஆக்கூர் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். எனினும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
  இந்நிலையில், ஆக்கூர் கிராமத்தில் மூடப்பட்ட இந்தியன் வங்கிக் கிளையை மீண்டும் திறக்கக் கோரி, அந்தக் கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் த.வேம்பன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  இதில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜவேலு, சுய உதவிக்குழுத் தலைவர் கெஜா, ஊர் பிரமுகர்களான கோபால், எல்லப்பன், குமார், மணி, குட்டி, ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள், கிராம மக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai