1.26 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் பணி தொடக்கம்
By DIN | Published on : 21st March 2017 08:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 1,272 மையங்களில் 1.26 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் பணி திங்கள்கிழமை (மார்ச் 20) தொடங்கியது.
திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு ஒருமுறை 6 மாத வயது முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது. கண் பார்வைக் குறைபாட்டைத் தடுத்தல், தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப் போக்கு, நிமோனியா உள்ளிட்ட நோய்களை இந்த திரவம் தடுக்கும்.
அதன்படி, திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 1,272 மையங்கள் மூலம் 1 லட்சத்து 26 ஆயிரத்து 611 குழந்தைகளுக்கு இந்தத் திரவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 6 முதல் 12 மாதக் குழந்தைகளுக்கு ஒரு மில்லி, அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 2 மில்லி திரவம் வழங்கப்படும்.
மார்ச் 25-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், கிராமச் செவிலியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் உள்பட 120 பேர் ஈடுபடுகின்றனர்.
எனவே, குழந்தைகளின் பெற்றோர் இந்தத் திரவத்தைத் தங்களது குழந்தைகளுக்கு கட்டாயம் வழங்க வேண்டும் என சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.