சுடச்சுட

  

  செங்கம் அருகே குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கக் கோரி செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது.
  அந்தனூர் கிராம ஊராட்சிக்கு உள்பட்டது துரிஞ்சாபுரம் கிராமம். இந்தக் கிராமத்தில் அண்மைக்காலமாக கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே, போதிய குடிநீர் வசதி செய்து தரக் கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் முறையிட்டனர்.
  எனினும், தற்போது ஊரக வளர்ச்சித் துறையினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்களின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
  இதனால் ஆத்திரமடைந்த துரிஞ்சாபுரம் கிராம மக்கள், செங்கம் - பெங்களூர் சாலையில் மேல்செங்கம் பகுதியில் மறியலில் ஈடுபடுவதற்கு காலிக் குடங்களுடன் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த மேல்செங்கம் காவல் நிலைய ஆய்வாளர் பூபதி மற்றும் போலீஸார், கிராம மக்களிடம் சுமார் அரை மணி நேரம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  இதைத் தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேலை செல்லிடப்பேசி மூலம் போலீஸார் தொடர்பு கொண்டனர். அப்போது, துரிசாபுரம் கிராமத்தில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் புதிதாக கைப்பம்புகள் அமைக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
  இது குறித்து கிராம மக்களிடம் போலீஸார் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள்   கலைந்து சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai