சுடச்சுட

  

  திருவண்ணாமலை அருகே 6 மாதங்களாக நீடிக்கும் குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி, 2 கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணாமலைபுரம், சு.நாச்சிப்பட்டு கிராமங்களில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
  6 மாதங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றின் நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதனால் குடிநீர் விநியோகம் தடைபட்டது. இதையடுத்து, குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி, 6 மாதங்களாக அண்ணாமலைபுரம், சு.நாச்சிப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் முறையிட்டு வருகின்றனர்.
  எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் புதன்கிழமை திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வெறையூர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான போலீஸார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  அப்போது, ஓரிரு நாள்களில் குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த மறியலால் அந்தச் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai