சுடச்சுட

  

  சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை திறக்காவிட்டால் போராட்டம்: விக்கிரமராஜா அறிவிப்பு

  By DIN  |   Published on : 23rd March 2017 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேத்துப்பட்டில் மூடப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை உடனடியாகத் திறக்கா விட்டால் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா அறிவித்தார்.
  சேத்துப்பட்டு நகர தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டம் செஞ்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நகரத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். நகரச் செயலர் அண்ணாமலை, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒழுங்குமுறை விற்பனைக் கூட வியாபாரிகள் சங்கத் தலைவர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரி வரவேற்றார்.
  சிறப்பு விருந்தினராக மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசினார். பின்னர்,  விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை அவர் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் விக்கிரமராஜா கூறியதாவது:
  சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் தமிழகத்தில் விவசாயிகளின் விளை பொருள்களை கொள்முதல் செய்வதில் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 5 மாத காலமாக விவசாயிகளின் பணம் ரூ.1.50 கோடியை அதிகாரியின் உதவியுடன் வியாபாரிகள் சிலர் கையாடல் செய்துள்ளனர்.
  இதனால் கடந்த 2 மாத காலமாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூடப்பட்டு விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரேவை நேரில் சந்தித்து மனு அளித்தோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
  ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூடப்பட்டுள்ளதால் சேத்துப்பட்டு நகரில் 50 சதவீத வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சேத்துப்பட்டு, திருவண்ணாமலை பகுதி விவசாயிகளின் பிரச்னையாக கொள்ளாமல் தமிழத்தின் பிரச்னையாக கொண்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அடுத்தகட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டு செயல்படும் என்றார்.
  உடன், திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் மண்ணுலிங்கம், மண்டலத் தலைவர் சண்முகம் உள்பட பலர் இருந்தனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai