சுடச்சுட

  

  3-ஆவது நாளாக சாலை மறியல்: சத்துணவு ஊழியர்கள் 500 பேர் கைது

  By DIN  |   Published on : 24th March 2017 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலையில் தொடர்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 500 பேரை போலீஸார் கைது செய்தனர்.
  தமிழகம் முழுவதும் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலும் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. செவ்வாய், புதன்கிழமைகளில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
  3-ஆவது நாளாக சாலை மறியல்: இந்நிலையில், 3-ஆவது நாளான வியாழக்கிழமை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் திருவண்ணாமலை, அண்ணாசிலை எதிரே குவிந்தனர். பின்னர், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  இதைத் தொடர்ந்து, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தண்டராம்பட்டு, பெங்களூரு செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
  தமிழகத்தில் 8-ஆவது ஊதியக் குழுவை உடனே அமல்படுத்த வேண்டும். 8-ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்தும்போது சத்துணவு ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். 33 ஆண்டுகள் பணி செய்து ஓய்வுபெறும் சத்தணவு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்.
  சத்துணவுத் திட்டத்துக்கு தனியாக துறையை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்டத் தலைவர் அல்போன்ஸ் உள்பட 500 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai