Enable Javscript for better performance
அம்மா திட்ட முகாம்: 269 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 269 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    வந்தவாசி வட்டம், தேசூர் உள்வட்டத்துக்கு உள்பட்ட சித்தருகாவூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வந்தவாசி வட்டாட்சியர் எஸ்.முருகன் தலைமை வகித்தார். வந்தவாசி ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அரிதாஸ் முன்னிலை வகித்தார்.
    இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 201 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலித்த வருவாய்த் துறையினர் 12 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 23 பேருக்கு சிறுகுறு விவசாயச் சான்று, 23 பேருக்கு குடும்ப அட்டையில் திருத்தம் உள்பட 77 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.
    முகாமில் மண்டல துணை வட்டாட்சியர் எஸ்.திருமலை, வட்ட வழங்கல் அலுவலர் சங்கரன், தெள்ளாறு கூட்டுறவு சங்கத் தலைவர் வி.தங்கராஜ், வருவாய் ஆய்வாளர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர் மென்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    ஆரணி: ஆரணி நகரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் வட்டாட்சியர் தமிழ்மணி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் இடர்பாடு நிவாரண வட்டாட்சியர் சேகர், வட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணி, வருவாய் அலுவலர் தட்சிணாமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் லோகேஷ், இளவரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
    முகாமில் 132 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
    முன்னூர்மங்கலம்: செங்கத்தை அடுத்த முன்னூர்மங்கலம் கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 100-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
    பின்னர், 60 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை செங்கம் வட்டாட்சியர் உதயகுமார் வழங்கினார். இதில் மண்டல துணை வட்டாட்சியர் மலர்கொடி, வருவாய் ஆய்வாளர் காசி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபாஷினி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    ஓலைப்பாடி: வேட்டவலத்தை அடுத்த ஓலைப்பாடி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் சுகுணா தலைமை வகித்தார். தனி வட்டாட்சியர் சுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் கலையரசி வரவேற்றார். முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 71 மனுக்கள் பெறப்பட்டன.
    இந்த மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு, நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், கிராம நிர்வாக அலுவலர் ஐங்கரன், அரசு அதிகாரிகள், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai