சுடச்சுட

  

  திருவண்ணாமலையில் கைதி தப்பி ஓட்டம்: உதவி ஆய்வாளர், காவலர் மீது நடவடிக்கை

  By DIN  |   Published on : 25th March 2017 07:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலையில் கைதியை தப்பவிட்ட காவல் உதவி ஆய்வாளர், காவலர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி உத்தரவிட்டுள்ளார்.
  திருவண்ணாமலையை அடுத்த பவித்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (33). இவர், அண்மையில் அந்தக் கிராமத்தில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
  இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு பவித்திரம் மகளிர் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள கழிவுநீர் கால்வாயில் வைத்திலிங்கம் மண்ணைக் கொட்டினாராம். இதுகுறித்து, பள்ளி முதல்வர் தெலிந்தா, ஊராட்சிச் செயலர் பச்சையப்பனுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, அங்கு வந்த பச்சையப்பன், கழிவுநீர் கால்வாயில் கொட்டப்பட்ட மண்ணை அகற்ற முயன்றுள்ளார்.
  அப்போது, இந்தக் கழிவுநீர் கால்வாய் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதால் மண்ணை கொட்டியுள்ளதாவும், அதனை அகற்ற வேண்டாம் என்றும் வைத்தியலிங்கம் கூறினாராம்.
  இதைத் தொடர்ந்து, வைத்தியலிங்கத்துக்கும், பச்சையப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வைத்தியலிங்கம், பச்சையப்பனின் கையை பிளேடால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.
  இதுகுறித்து வழக்குப் பதிந்த வெறையூர் போலீஸார், வைத்தியலிங்கத்தை வியாழக்கிழமை கைது செய்தனர்.
  பின்னர், திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, வெறையூர் காவல் உதவி ஆய்வாளர் ரவி, தலைமைக் காவலர் சீனுவாசன் ஆகியோர் வேலூர் மத்திய சிறைக்கு வைத்தியலிங்கத்தை அழைத்துச் சென்றனர்.
  முன்னதாக, திருவண்ணாமலை பேருந்து நிலையம் எதிரே ஒரு உணவகத்தில் மூவரும் சேர்ந்து சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட பிறகு கை கழுவச் சென்ற வைத்தியலிங்கம், போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
  இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து தப்பிச் சென்ற வைத்தியலிங்கத்தை தேடி வருகின்றனர். இதற்கிடையே, பணியில் கவனக்குறைவாக இருந்த உதவி ஆய்வாளர் ரவி, தலைமைக் காவலர் சீனுவாசன் ஆகியோர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி
  உத்தரவிட்டுள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai