சுடச்சுட

  

  கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் குடிநீர்த் திட்டப் பணிகள் ஆய்வு

  By DIN  |   Published on : 26th March 2017 04:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு குடிநீர்த் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  வறட்சியின் காரணமாக கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திறந்தவெளி கிணறுகளை ஆழப்படுத்துதல், குடிநீர் குழாய்களை விஸ்தரித்தல், ஆழ்துளை கிணறுகளை சுத்தப்படுத்துதல், புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு குடிநீர்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  இந்தப் பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே சனிக்கிழமை கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரேசன், மகாதேவன் ஆகியோரிடம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் குடிநீர்த் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
  இதையடுத்து, கொளத்தூர், ஆவூர், பொலக்குணம், கலித்தேரி ஊராட்சிகளில் நடைபெறும் குடிநீர்த் திட்டப் பணிகளை ஆட்சியர் மு.வடநேரே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கொளத்தூரில் ரூ.2 லட்சம் மதிப்பில் நடைபெறும் குழாய் விஸ்தரிப்புப் பணிகள், ஆவூரில் ரூ.75 ஆயிரம் மதிப்பில் நடைபெறும் திறந்தவெளி கிணற்றை ஆழப்படுத்தும் பணி, பொலக்குணம் ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பில் நடைபெறும் திறந்தவெளி கிணற்றை ஆழப்படுத்தும் பணி ஆகியவற்றை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
  இந்த ஆய்வின்போது, ஒன்றியப் பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.
  பர்வத மலையில் ஆய்வு: இதேபோல, கலசப்பாக்கம் வட்டம், தென்மகாதேவமங்கலம் பகுதியில் பர்வத மலை மீதுள்ள பழமையான மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் மு.வடநேரே சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
  இந்தக் கோயிலுக்கு பொர்ணமி நாள்களிலும், மற்ற நாள்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால், இங்கு பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
  இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே, இந்தக் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai