சுடச்சுட

    

    கைதி தப்பி ஓடிய சம்பவம் 2 உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

    By DIN  |   Published on : 26th March 2017 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கைதி தப்பியோடிய சம்பவம் தொடர்பாக, 2 உதவி ஆய்வாளர்கள், ஒரு தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி சனிக்கிழமை உத்தரவிட்டார்.
    திருவண்ணாமலையை அடுத்த பவித்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வைத்தியலிங்கம் (33). இவர், கடந்த மாதம் பவித்திரம் கிராமத்தில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி, கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும். இல்லாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், வைத்தியலிங்கம் சில தினங்களுக்கு முன்பு பவித்திரம் கிராமத்தில் உள்ள தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள கழிவுநீர் கால்வாயில் மண்ணைக் கொட்டினாராம். இதுகுறித்து, பள்ளி முதல்வர் தெலிந்தா, ஊராட்சிச் செயலர் பச்சையப்பனிடம் முறையிட்டார்.
    பச்சையப்பன் அந்தப் பகுதிக்குச் சென்று கழிவுநீர் கால்வாயில் கொட்டியிருந்த மண்ணை அகற்ற முயன்றார். அப்போது, இந்தக் கழிவுநீர் கால்வாய் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதால் மண்ணை கொட்டினேன். எனவே, மண்ணை அகற்ற வேண்டாம் என்று வைத்தியலிங்கம் கூறினாராம். இதையடுத்து வைத்தியலிங்கம், பச்சையப்பனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வைத்தியலிங்கம், பச்சையப்பனின் கையை பிளேடால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெறையூர் போலீஸார் கடந்த வியாழக்கிழமை வழக்குப் பதிந்து, வைத்தியலிங்கத்தை கைது செய்தனர். பின்னர், திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வேலூர் மத்திய சிறையில் 15 நாள்கள் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, வேலூருக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னதாக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகத்தில் வைத்தியலிங்கமும், அவரை அழைத்துச் சென்ற போலீஸாரும் சாப்பிட்டனர். சாப்பிட்ட பிறகு கை கழுவச் சென்ற வைத்தியலிங்கம், போலீஸாரின் பிடியில் இருந்து தப்பினார். இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, தப்பிச் சென்ற வைத்தியலிங்கத்தை தேடி வருகின்றனர். வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை இரவு வரை பல்வேறு இடங்களில் தேடியும் தப்பிச் சென்றவர் கிடைக்கவில்லை.
    எனவே, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக வெறையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மதியழகன், ரவி, தலைமைக் காவலர் சீனுவாசன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி சனிக்கிழமை உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai