சுடச்சுட

  

  சிவன் கோயில்களில் மகா பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் பங்கேற்பு

  By DIN  |   Published on : 26th March 2017 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சனிக்கிழமை நடைபெற்ற மகா பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
  சிவனுக்கு உகந்த பூஜைகளில் பிரதோஷ பூஜையும் ஒன்று. அதிலும், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதன்படி, சனிக்கிழமை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது.
  திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் ஆயிரம் கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, மூலவர் சன்னதி எதிரே உள்ள நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
  மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு நடைபெற்ற பிரதோஷப் பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர், கோயில் 3-ஆம் பிரகாரத்தை வலம் வந்தார். கோயில் வளாகத்தில் குவிந்திருந்த பல ஆயிரம் பக்தர்கள் பிரதோஷ நாயகரை வழிபட்டனர்.
  வேட்டவலம்: வேட்டவலத்தில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் மூலவர் ஸ்ரீஅகத்தீஸ்வரர், ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்மாள், பிரதான நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
  வில்வம், அரும்புல், பூ ஆகியவற்றால் செய்யப்பட்ட ராஜ அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதோஷப் பூஜையில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு வெண்பொங்கல், சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது.
  இதேபோல, செங்கம், செய்யாறு, ஆரணி, வந்தவாசி, போளூர், கலசப்பாக்கம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சிவன் கோயில்களில் சனிக்கிழமை நடைபெற்ற பிரதோஷப் பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai