சுடச்சுட

  

  தமிழகத்திலேயே முதல் முறையாக செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முற்றிலும் கணினிமயம்

  By DIN  |   Published on : 26th March 2017 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்திலேயே முதல் முறையாக செய்யாறில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆன்லைன் வசதியுடன் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு, முன்மாதிரி அலுவலகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
  செய்யாறில் செயல்பட்டு வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கடந்த 2015 ஜூன் மாதம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் தினந்தோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட புதிய மோட்டார் சைக்கிள்கள், கார் மற்றும் கனரக வாகனங்களை பதிவு செய்தல், பதிவு பெற்ற வாகனங்களுக்கு தகுதிச் சான்று அளித்தல், வாகன வரி செலுத்துதல், ஓட்டுநர் உரிமம் வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  இந்நிலையில், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு செலுத்த வேண்டிய பல்வேறு கட்டணங்கள் இந்த அலுவலகத்தில் உள்ள கட்டணம் செலுத்தும் பிரிவில் செலுத்தப்பட்டு, ரசீது வழங்கப்பட்டு வந்தது. இந்த அலுவலகம் தொடங்கிய குறுகிய காலத்திலேயே தமிழக அரசுக்கு மாதந்தோறும் சுமார் ரூ.54 லட்சம் வரை வருவாய் கிடைத்து வந்தது. இந்த அலுவலகம் மற்ற மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களைவிட கூடுதல் வருவாயை அரசுக்கு ஈட்டிக் கொடுத்து வந்தது.
  வருவாயின் அடிப்படையில், தமிழகத்திலேயே முதன் முறையாக முற்றிலும் இணையதளம் மூலம் பணம் செலுத்துதல், வாகனங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்திட முன்மாதிரி அலுவலகமாக இந்த அலுவலகம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
  இதனால் ஓட்டுநர் உரிமம், புதிய வாகனப் பதிவு உள்ளிட்ட பல பணிகளுக்கு உரிமையாளரின் செல்லிடப்பேசி எண், பான் அட்டை எண், ஆதார் எண் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
  இந்நிலையில், வாகன விற்பனையாளர்களுக்கு இதுகுறித்து தெரிவிக்கும் வகையில், செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் அவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திருவண்ணாமலை மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அழகரசு தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெ.ராமரத்தினம் முன்னிலை வகித்தார்.
  கூட்டத்தில் மோட்டார் வாகன தேசிய தகவல் மைய இயக்குநர் ராம்தாஸ், உதவி இயக்குநர் கதிர்வேல் ஆகியோர் கலந்துகொண்டு இணையதளம் மூலம் தகவல்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பது குறித்து வாகன விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில் மோட்டார் சைக்கிள், கார் விற்பனையாளர்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai