சுடச்சுட

  

  நகராட்சி கடைகளின் வாடகை 10 மடங்கு உயர்வு: ஆரணி வியாபாரிகள் ஆலோசனை

  By DIN  |   Published on : 27th March 2017 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆரணி நகராட்சிக்குச் சொந்தமான சுமார் 450 கடைகளுக்கு 10 மடங்கு வரை வாடகை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஆரணி நகராட்சி கடைகளின் வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  ஆரணி நகராட்சிக்குச் சொந்தமாக பழைய பேருந்து நிலையம் அருகில், புதிய பேருந்து நிலையம், சந்தை சாலை, காய்கனி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 450 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு ஏற்கெனவே நியமிக்கப்பட்ட வாடகையைவிட தற்போது 10 மடங்கு வரை வாடகை உயர்த்தப்பட்டு, நகராட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் நகராட்சி கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
  நகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு 9 ஆண்டுகளுக்கு ஒரு முறை அன்றைய நிலவரப்படி வாடகையை மதிப்பீடு செய்து உயர்த்திக்கொள்ளலாம் என்று கடந்த 2007-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், தற்போது 9 ஆண்டு காலம் முடிந்ததால், இன்றைய மதிப்பீட்டின்படி, ஆரணி நகராட்சி கடைகளுக்கு சுமார் 10 மடங்கு வரை வாடகை உயர்த்தப்பட்டுள்ளதாம். இந்நிலையில், ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆரணி நகராட்சி கடைகளின் வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  கூட்டத்தில், வாடகை உயர்த்தப்பட்டது குறித்து ஆரணி சட்டப்பேரவை உறுப்பினரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரனை சந்தித்து வாடகையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
  மேலும், திமுக ஆட்சியில் 9 ஆண்டுகளுக்கு ஒரு முறை நகராட்சி கடைகளுக்கான வாடகையை உயர்த்திக் கொள்ளும் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியர், வேலூர் நகராட்சி மண்டல இயக்குநர், ஆரணி நகராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கவும் வியாபாரிகள் தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்தில் ஆரணி நகராட்சி கடைகளின் வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் சேஷாசலம், செயலர் குருநாராயணன், பொருளர் எம்.முனுசாமி, துணைத் தலைவர் ஜி.செல்வராஜ், இணைச் செயலர் செங்கீரன், காய்கனி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சுபானி, செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai