சுடச்சுட

  

  குடிநீர் கோரி சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கிராம மக்கள் திங்கள்கிழமை பானை உடைப்பு போராட்டம் நடத்தினர்.
  சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம், மருத்துவாம்பாடி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் 70 வீடுகள் உள்ளன. 350க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக, ஒரு மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, 5 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகம் நடைபெற்று வந்தது.
  தற்போது கடும் வறட்சி நிலவுவதால் நிலத்தடிநீர் குறைந்து, திறந்தவெளிக் கிணறு, ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் குறைந்துவிட்டது.
  இதனால், கடந்த 2 மாதமாக இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டதாம். குடிநீர் தேவைக்காக அவர்கள் ஒரு கி.மீ. தொலைவு சென்று விவசாயக் கிணறுகளில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.
   தற்போது விவசாயக் கிணறுகளிலும் தண்ணீர் வற்றிப்போனதால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
  இதுகுறித்து, சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சிச் செயலர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.  இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள், அம்பேத்கர் இந்திய குடியரசுக் கட்சி மாநில துணைப் பொதுச் செயலர் அ.த.சுந்தர் தலைமையில் காலிக் குடங்கள் மற்றும் மண் பானைகளுடன் திரண்டு வந்து சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, பானை உடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   தகவலறிந்த சேத்துப்பட்டு போலீஸார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  அப்போது, ஊராட்சிச் செயலர் பழனி ஆழ்துளைக் கிணறுகளை உடனே சீரமைத்து குடிநீர் விநியோகம் செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரியிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு கலைந்துசென்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai