சுடச்சுட

  

  திருவண்ணாமலையில் ஹோட்டலில் சாப்பிட்டபோது தப்பிச் சென்ற கைதி திங்கள்கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
   திருவண்ணாமலையை அடுத்த பவித்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வைத்தியலிங்கம் (33). பிப்ரவரி மாதம் பவித்திரம் கிராம செல்போன் கோபுரத்தில் ஏறி, கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.
  உடனே அதிகாரிகள் விரைந்து வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். சில அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தனர்.
   இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு, பவித்திரம் கிராம தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள கழிவுநீர் கால்வாயில் வைத்தியலிங்கம் மண்ணைக் கொட்டினாராம். இதுகுறித்து, பள்ளி முதல்வர் தெலிந்தா, ஊராட்சிச் செயலர் பச்சையப்பனிடம் முறையிட்டார்.
  பச்சையப்பன் வந்து கழிவுநீர் கால்வாயில் கொட்டியிருந்த மண்ணை அகற்ற முயன்றபோது, வைத்தியலிங்கம், பச்சையப்பனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வைத்தியலிங்கம், பச்சையப்பனின் கையை  பிளேடால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.
   இதுகுறித்து, வெறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து வியாழக்கிழமை (மார்ச் 23) வைத்தியலிங்கத்தை கைது செய்தனர்.
  திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வேலூர் மத்திய சிறையில் 15 நாள்கள் அடைக்க போலீஸார் அழைத்துச் சென்றனர்.
  முன்னதாக, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஹோட்டலில் வைத்தியலிங்கமும், அவரை அழைத்துச் சென்ற போலீஸாரும் சாப்பிட்டனர். சாப்பிட்ட பிறகு கை கழுவச் சென்ற வைத்தியலிங்கம், போலீஸாரின் பிடியில் இருந்து தப்பினார்.
  இதையடுத்து, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக வெறையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மதியழகன், ரவி, தலைமைக் காவலர் சீனுவாசன் ஆகியோரை தாற்காலிகமாக பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி சனிக்கிழமை உத்தரவிட்டார்.
  நீதிமன்றத்தில் சரண்: இதற்கிடையே, தப்பிச் சென்ற வைத்தியலிங்கம், திங்கள்கிழமை திருவண்ணாமலை ஜே.எம்.1-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
  வழக்கை விசாரித்த நீதிபதி மலர்க்கொடி, வைத்தியலிங்கத்தை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.  இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைத்தியலிங்கம் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai