தலைமையாசிரியர் பணியிடை நீக்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
By DIN | Published on : 28th March 2017 06:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஆரணி அடுத்த களம்பூர் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆரணி அடுத்த களம்பூர் பொன்னகர் பகுதியில் உள்ள ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். தலைமையாசிரியர் தமிழ்மணி உள்பட 9 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளிமாணவர்களை வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்ததில் மாணவர்களுக்கு திறமை குறைவாக இருப்பதை கண்டறிந்து கூறினர்.
இதனால் தலைமையாசிரியர், பள்ளியில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. எனவே, அதைக் தடுக்க வேண்டும் எனக் கூறி களம்பூர் பகுதியில் உள்ள சிலரின் உதவியுடன் பள்ளியின் சுற்றுச் சுவரை உயர்த்திக் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தாகத் தெரிகிறது.
இந்த நிலையில், களம்பூரில் உள்ள ஒரு சிலர் தலைமையாசிரியர் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று மாவட்ட நிர்வாகத்தில் புகார் செய்துள்ளனர்.
இதனால் மாவட்ட பள்ளி நிர்வாகம் பள்ளியை ஆய்வு செய்து, தகவல் தெரிவிக்காமல் சுற்றுச்சுவர் கட்டி வருவதை சுட்டிக்காட்டி தலைமையாசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், அப்பள்ளியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் நேரு இளைஞர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் தலைமையாசிரியரை பணியிடை நீக்கம் செய்ததைக் கண்டித்தும், மேலும் பணிபுரியும் உள்ளூரைச் சேர்ந்த ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.