சுடச்சுட

  

  பெண்களால்தான் சிறந்த மனிதர்களை  உருவாக்க முடியும்: டிஎஸ்பி என்.தேவநாதன் பேச்சு

  By DIN  |   Published on : 28th March 2017 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெண்களால்தான் சிறந்த மனிதர்களை உருவாக்க முடியும். ஆதிகாலத்தில் பெண்கள்தான் குடும்பத் தலைவியாக இருந்துள்ளனர் என்று திருவண்ணாமலை ஊரக டிஎஸ்பி என்.தேவநாதன் பேசினார்.
   திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம் சார்பில், சர்வதேச மகளிர் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. மகளிர் திட்ட உதவி அலுவலர் ஸ்ரீபாரதி தலைமை வகித்தார். சினம் தொண்டு நிறுவன இயக்குநர் இராம.பெருமாள் முன்னிலை வகித்தார். சினம் தொண்டு நிறுவனத் தலைவி தேன்மொழி வரவேற்றார்.
  திருவண்ணாமலை ஊரக டிஎஸ்பி என்.தேவநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், பெண்களால்தான் சிறந்த மனிதர்களை உருவாக்க முடியும். பில்கேட்ஸ், நரேந்திர மோடி ஆகியோரின் தாய்மார்கள் எந்தக் கல்லூரிகளுக்கும் சென்று கற்கவில்லை.
  பெண்கள் முன்னேற்றம் என்பது பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதும், கல்வி, பொருளாதாரம் மூலம் முன்னேற்றம் அடைவதிலும்தான் உள்ளது. சிறுவயது திருமணங்கள் நடைபெறுவது தடுக்கப்பட வேண்டும். ஆதிகாலத்தில் பெண்கள்தான் குடும்பத் தலைவர்களாக இருந்துள்ளனர். ஆண்கள் வேட்டையாடச் செல்வது, வெளியூர் சென்று பொருள் தேடுவது வழக்கம்.
  பெண்கள் குடும்பத் தலைவியாக இருந்து குடும்பத்தை நிர்வகிப்பது, பிள்ளைகளை வளர்ப்பது போன்ற பணிகளை செய்து வந்தனர். இப்போதும் கேரளத்தில் பெண்கள் தான் குடும்பத் தலைவர்களாக உள்ளனர். இந்த உலகை பெண்கள் தான் இயக்கி வருகின்றனர் என்றார்.
  தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வென்ற பெண்களுக்கு டிஎஸ்பி என்.தேவநாதன் பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார். விழாவில், தொண்டு நிறுவன ஆலோசகர் டி.தாசையன், பாலாம்பிகை, சினம் தொண்டு நிறுவன பெண்கள் ஒருங்கிணைப்பாளர் எஸ்.தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  முன்னதாக, சேட்டு, சுப்பிரமணி குழுவினரின் நாட்டுப் புறப்பாட்டு, மகளிர் குழுக்களின் நடனம் நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட பெண்கள், மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai