சுடச்சுட

  

  தோஷம் நீக்குவதாகக் கூறி ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் 8 பவுன் நகை நூதனத் திருட்டு

  By DIN  |   Published on : 29th March 2017 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் தோஷம் நீக்குவதாகக் கூறி, பெண்களிடம் 8 பவுன் நகைகளை நூதன முறையில் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
  செய்யாறு எல்லப்பா நகரில் வசிப்பவர் சேட்டு. இவர், ஓய்வுப் பெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆவார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவரது மகள் சக்திகௌரி (25). திருமணமான இவர், சென்னையில் இருந்து அண்மையில் செய்யாறுக்கு வந்துள்ளார்.
  இந்நிலையில், கிருஷ்ணவேணி, சக்திகெளரி ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது, லுங்கி கட்டி வந்த அடையாளம் தெரியாத நபர், வீட்டில் தோஷம் இருப்பதாகவும், தோஷம் நீக்கினால் நல்லது என்றும் கூறியுள்ளார். மேலும், உங்கள் கணவர் தான் சொல்லி அனுப்பினார் என்றும் கிருஷ்ணவேணியிடம் அந்த நபர் கூறியுள்ளார்.
  இதையடுத்து, அவர்கள் தோஷம் கழிக்க சம்மதித்ததால், பூஜைக்காக செம்பில் தண்ணீரும், அதில் போடுவதற்கு தங்க நகைகளும் வேண்டும் என்று மர்ம நபர் கூறினாராம். இதைத் தொடர்ந்து, சக்திகௌரி அணிந்திருந்த தங்கச் சங்கிலிகள், 2 மோதிரங்கள் ஆகியவற்றை செம்பில் போட்டாராம்.
  உடனே, அந்த நபர் பூஜை செய்வதுபோல, சிறிது நேரம் நடித்து நகை இருந்த செம்புடன் வீட்டை சுற்றி வலம் வந்ததாகத் தெரிகிறது. பின்னர், சுற்றிப் போடுவதற்கு எலுமிச்சம் பழம் வாங்கி வருவதாகக் கூறி, வீட்டில் செம்பை வைத்துவிட்டு சென்ற மர்ம நபர், பல மணி நேரம் ஆகியும் திரும்பி வரவில்லையாம்.
  இதனால் சந்தேகமடைந்த கிருஷ்ணவேணி, சக்திகெளரி ஆகியோர் செம்பில் போட்ட 8 பவுன் நகைகளை தேடியபோது, அவை காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
  இதையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிருஷ்ணவேணி, செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் சசிகலா வழக்குப் பதிவு செய்து, நூதன முறையில் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai