சுடச்சுட

  

  நீர்நிலைகளைப் பராமரிக்காததால் தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது: திருவள்ளுவர் பல்கலை. துணை வேந்தர் பேச்சு

  By DIN  |   Published on : 29th March 2017 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை நாம் சரியாகப் பராமரிக்காததால், தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது என்று வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் த.முருகன் பேசினார்.
  திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 11-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார். தாளாளர் என்.குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் கே.ஆனந்தராஜ் வரவேற்றார். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் த.முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு 1,334 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது:
  பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் அடுத்ததாக ஆராய்ச்சிப் படிப்பு படிக்கவும், உயர் கல்வி பயிலவும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகின்றனர். உலகத் தரம் வாய்ந்த கல்வியை இந்திய கல்வி நிறுவனங்களே வழங்குகின்றன. எனவே, ஆராய்ச்சிப் படிப்புகளையும், உயர் கல்வியையும் மாணவ, மாணவிகள் இந்தியாவிலேயே தொடரலாம்.
  கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட நாம் அனைவருமே நீர்நிலை மேலாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை சரிவர பராமரிக்காத காரணத்தால்தான் இன்று தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது.
  கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் போதிய அளவு மழை பெய்துள்ளது.
  ஆனாலும், தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் நெகிழிப் பொருள்கள் (பிளாஸ்டிக்) நீர் நிலைகளை ஆக்கிரமிக்கின்றன. இதுபோன்ற நெகிழி கழிவுகள்தான் நிலத்தடி நீர் மட்டத்தை பாதிக்கிறது. மேலும், சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி, நோய்களை பரப்புகிறது.
  பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் வாழ்க்கையில் மென்மேலும் உயர வேண்டும். அப்துல் கலாம், அன்னை தெரசா, இந்திரா காந்தி போல வாழ்க்கையில் சிறந்த சாதனையாளராக நீங்களும் வர வேண்டும் என்றார்.
  விழாவில், கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர்கள் சீனி.கார்த்திகேயன், என்.எத்திராஜன், பி.ராமச்சந்திர உபாத்யாயா, எம்.சண்முகசுந்தரம், எஸ்.டி.ஆர்.எஸ்.பாபு மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai