சுடச்சுட

  

  போலி பணி நியமன ஆணை அளித்து ஆசிரியையாக சேர முயன்ற பெண் கைது

  By DIN  |   Published on : 29th March 2017 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் போலி பணி நியமன ஆணையை அளித்து அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக சேர முயன்ற பெண், அவருக்கு உதவிய சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
  வந்தவாசி அருகே தெள்ளாறை அடுத்துள்ள இரும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் மகேஸ்வரி (36). இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், கீழ்மாவலங்கை கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதிக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
  இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
  மகேஸ்வரி கடந்த 6 ஆண்டுகளாக கணவர், குழந்தைகளை பிரிந்து சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் வசித்து வருகிறார். அங்கு தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
  இந்த நிலையில், வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு திங்கள்கிழமை பிற்பகல் சென்ற மகேஸ்வரி, அந்தப் பள்ளியில் வரலாறு பாட ஆசிரியையாக தான் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, அதற்கான பணி நியமன ஆணையை பள்ளித் தலைமை ஆசிரியை பானுமதியிடம் அளித்தார்.
  இதில் சந்தேகமடைந்த தலைமை ஆசிரியை அந்த ஆணையை ஸ்கேன் செய்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்.
  பின்னர், அந்தப் பணி நியமன ஆணை போலியானது என்பது தெரிய வந்தது.
  இதுகுறித்து வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் பானுமதி திங்கள்கிழமை இரவு புகார் அளித்தார். அதன்பேரில், மகேஸ்வரி, அவரது தம்பி ராஜசேகர் (32), திருவண்ணாமலையை அடுத்துள்ள மருத்துவாம்பாடியைச் சேர்ந்த சக்கரபாணி ஆகியோர் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸார் மகேஸ்வரி, ராஜசேகர் ஆகிய 2 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
  இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
  வரலாறு பாடத்தில் மகேஸ்வரி எம்.ஏ., பி.எட் படித்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 109 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
  இந்த நிலையில், ஆசிரியர் பணியைப் பெறுவதற்காக தனது தம்பி ராஜசேகர் மூலம் சக்கரபாணி என்பவரிடம் ரூ.3.50 லட்சம் கொடுத்துள்ளார்.
  அவர் இந்த போலி பணிநியமன ஆணையை மகேஸ்வரியிடம் கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் யாருக்கும் தொடர்புள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai