சுடச்சுட

  

  ஆரணி விஏகே நகர், பள்ளிக்கூடத் தெரு ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் 7 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  ஆரணி விஏகே நகர் பகுதியைச் சேர்ந்த தேவகி (58), வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் விஜயராகவன், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் மாலதி, சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார்.
  இந்நிலையில், தேவகி செவ்வாய்க்கிழமை சென்னையில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்றார். பின்னர், புதன்கிழமை அவர் வீட்டுக்குத் திரும்பியபோது, வீட்டுக் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், பீரோவில் இருந்து 5 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்ததாம். இதுகுறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் தேவகி புகார் அளித்தார்.
  மற்றொரு சம்பவம்: ஆரணி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார்(45). இவர், புதன்கிழமை வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சொந்த ஊரான அக்ராபாளையம் கிராமத்துக்கு சென்றார். மாலையில் அவர் வீட்டுக்கு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு,
  2 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்ததாம்.
  இதுகுறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் சிவக்குமார் புகார் அளித்தார். இதையடுத்து, ஆரணி நகர போலீஸார் விரல் ரேகை நிபுணர்களைக் கொண்டு ரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே நாளில் 2 இடங்களில் திருட்டு நடைபெற்றுள்ளதால், பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai