சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 10-க்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published on : 30th March 2017 08:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 183 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 183 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.950 - 2,000 மற்றும் தர ஊதியம் ரூ.200 என்ற ஊதிய விகிதத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
183 காலிப் பணியிடங்கள்: திருவண்ணாமலை ஒன்றியத்தில் 22 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதேபோல, கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 2, துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் 11, போளூர் ஒன்றியத்தில் 24, கலசப்பாக்கம் ஒன்றியத்தில் 8, சேத்பட் ஒன்றியத்தில் 10, செங்கம் ஒன்றியத்தில் 25, புதுப்பாளையம் ஒன்றியத்தில் 10, தண்டராம்பட்டு ஒன்றியத்தில் 5, ஜவ்வாதுமலையில் 18, செய்யாறில் 11, வெம்பாக்கத்தில் 1, வந்தவாசியில் 7, பெரணமல்லூரில் 3, ஆரணியில் 5, மேற்கு ஆரணியில் 10, திருவண்ணாமலை நகராட்சியில் 2, ஆரணி நகராட்சியில் 4, திருவத்திபுரம் நகராட்சியில் 5 என மொத்தம் 183 காலிப் பணியிடங்கள் உள்ளன.
இவற்றில் 6 பணியிடங்கள் ஆதிதிராவிடர் (அருந்ததியினர்) சமூகத்தினருக்கும், 27 பணியிடங்கள் ஆதிதிராவிடர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பழங்குடியினருக்கு 2 பணியிடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 36 பணியிடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம்களுக்கு 6 பணியிடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம் தவிர) 49 பணியிடங்களும், பொதுப்பிரிவினருக்கு 57 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 2017 பிப்ரவரி 1-ஆம் தேதியன்று 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், 40 வயதுக்கு உள்பட்டவராகவும், 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது தேர்ச்சி பெறாதவராக இருக்க வேண்டும்.
பழங்குடியினர் 2017 பிப்ரவரி 1-ஆம் தேதியன்று 18 முதல் 40 வயதுக்கு உள்பட்டவராகவும், எழுதப் படிக்கத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதுக்கு உள்பட்டராவகும் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ, தோல்வி அடைந்தவராகவோ இருக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, இருப்பிடம், சாதி, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் இதர முன்னுரிமை சான்றுக்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் பள்ளி சத்துணவு மையம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். 2017 பிப்ரவரி 1-ஆம் தேதியன்று 40 வயதை கடந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். ஒரு விண்ணப்பத்தில் ஒரு சத்துணவு மைய காலிப்பணியிடத்தை மட்டுமே குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
ஒதுக்கீடு செய்யப்பட்ட இனத்தை சேர்ந்தவரை தவிர மற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். இருப்பிடத்துக்கு ஆதாரமாக இருப்பிடச் சான்று, ஆதார் அடையாள அட்டையின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
சமையல் உதவியாளர் காலிப்பணியிட விவரம், இன சுழற்சி ஒதுக்கீடு விவரம் ஆகியவை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அலுவலகங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தகுதியான விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.