சுடச்சுட

  

  2 மாதங்களாக அமைக்கப்படாத ஆதனூர் - ஆரணி சாலை: பொதுமக்கள் கடும் அவதி

  By DIN  |   Published on : 30th March 2017 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆரணியை அடுத்த ஆதனூரில் இருந்து ஆரணிக்கு வரும் கிராமச் சாலையில் தார்ச்சாலை அமைப்பதற்காக ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டு, கடந்த 2 மாதங்களாக பணிகள் நடைபெறாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
  ஆதனூர் கிராமத்தில் சுமார் 5,000 பேர் வசித்து வருகின்றனர். ஆதனூரில் இருந்து ஆரணிக்கு 2 கி.மீ. தொலைவுள்ள பிரதான சாலை உள்ளது. இந்தச் சாலையில் தார்ச் சாலை அமைப்பதற்காக கடந்த 2 மாதத்துக்கு முன்பு பொக்லைன் இயந்திரம் மூலம் சாலை தோண்டப்பட்டது. மேலும், சாலைப் பணிக்காக ஜல்லிக் கற்களும் கொட்டப்பட்டன.
  பின்னர், பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டதால், ஆதனூர் கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் நகர பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்ட சாலையில் நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
  மேலும், தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள் இந்தக் கிராமத்துக்குச் செல்ல தயக்கம் காட்டி வருகின்றன. இந்நிலையில், அரசுப் பேருந்துகளும் கிராமத்துக்கு வருவதில்லையாம்.
  ஆதனூர் கூட்டுச்சாலையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் சைக்கிள் மூலம் பள்ளிக்குச் செல்ல அதிக நேரம் ஆகிறது. தற்போது பொதுத் தேர்வு நேரம் என்பதால் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்துடன் ஆதனூர் - ஆரணி சாலையில் சென்று வருகின்றனர்.
  இதனிடையே, இந்தச் சாலையில் விரைந்து தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
  இந்நிலையில், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் ஆதனூர் - ஆரணி சாலையை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லையெனில், பல்வேறு போராட்டங்களிலும், சாலை மறியலிலும் ஈடுபடவுள்ளதாக அந்தக் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

  "பாலங்கள் கட்டப்படுவதால் சாலைப் பணி தாமதம்'
  இது குறித்து ஆரணி ஊராட்சி ஒன்றியப் பொறியாளர் புருஷோத்தமனிடம் கேட்டதற்கு,
  ஆதனூர் கிராமச் சாலையின் குறுக்கே 3 சிறு பாலங்கள் கட்ட வேண்டியுள்ளது. இதில் ஒரு பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 பாலங்களை கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
  இந்தப் பாலங்களை கட்டிய பிறகு தார்ச்சாலைப் பணிக்காக சாலையைத் தோண்டியிருக்க வேண்டும். ஆனால், முன்னதாகவே சாலையைத் தோண்டிவிட்டதால், சாலை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாலம் கட்டும் பணி இன்னும் 10 நாள்களில் முடிந்துவிடும். இதைத் தொடர்ந்து, விரைவாக சாலை அமைக்கப்படும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai