குடிநீர்ப் பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்
By DIN | Published on : 31st March 2017 08:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி, திருவண்ணாமலை அருகே வியாழக்கிழமை காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலையை அடுத்துள்ளது மங்கலம் புதூர் கிராமம். இங்கு, 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய பயன்பட்டு வந்த ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் அண்மையில் பழுதடைந்தது.
இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திலும் கிராம மக்கள் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வியாழக்கிழமை காலிக்குடங்களுடன் திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மங்கலம் போலீஸார், துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ஓரிரு நாளில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்ப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.