சுடச்சுட

  

  வந்தவாசி தேனருவி நகரில் டாஸ்மாக் மதுக் கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  வந்தவாசி - சேத்பட் சாலையில் தேனருவி நகர் உள்ளது. இந்த நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வந்தவாசி அச்சரப்பாக்கம் சாலையில் இயங்கி வந்த மதுக் கடையை தேனருவி நகருக்கு மாற்றி அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
  இதுகுறித்து தகவலறிந்த தேனருவி நகர் பொதுமக்கள், தங்கள் பகுதியில் மதுக் கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை இரவு வந்தவாசி - சேத்பட் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  இதையடுத்து, வந்தவாசி தெற்கு போலீஸார் அங்கு சென்று பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், வியாழக்கிழமை இரவு இந்த புதிய கடையில் மதுபானங்களை இறக்கி வைக்க போவதாக தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும், ஆகையால் சாலை மறியலை கைவிட மாட்டோம் என்றும் பொதுமக்கள் கூறினர்.
  இதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனு எழுதி கையெழுத்திட்டு அளித்தால், உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து, போலீஸாரிடம் கோரிக்கை மனு அளித்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் வந்தவாசி - சேத்பட் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai