சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் மே 10-இல் சித்ரா பௌர்ணமி விழா: அன்னதானம் வழங்க நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 01st May 2017 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் வரும் 10-ஆம் தேதி சித்ரா பெளர்ணமி விழா நடைபெற உள்ளது. விழாவையொட்டி, அன்னதானம் வழங்க விரும்புவோர் செவ்வாய்க்கிழமை (மே 2) முதல் வரும் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.
    திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் 10-ஆம் தேதி நடைபெறும் சித்ரா பெளர்ணமி விழாவையொட்டி, அன்றைய தினம் சுமார் 15 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க விரும்புவோர் முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    அன்னதானம் வழங்க விரும்பும் நிறுவனங்கள், தனிநபர்கள் வரும் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் அலுவலக நேரத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
    ஆட்சியர் அலுவலகத்தின் 2-ஆவது மாடியில் உள்ள ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அன்ன தானம் வழங்க முன் அனுமதி பெற வேண்டும்.
    நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அன்னதானம் வழங்குவோர், கிரிவலப் பாதையில் உணவு சமைக்கக் கூடாது. தீப்பற்றக் கூடிய எரிவாயு உருளைகள், விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்புகளை பயன்படுத்தக் கூடாது.
    அன்னதானத்துக்காக கொண்டுவரப்படும் உணவை வழங்க வேண்டும். அன்னதானம் வழங்க கொண்டுவரப்படும் உணவுப் பொருள்கள் தரமானதாக, தூய்மையானதாக இருக்க வேண்டும்.
    அன்னதானம் வழங்க விண்ணப்பிக்க வருவோர் 5 புகைப்படங்கள், தங்களது முகவரியை தெரிவிக்கும் ஒரு சான்று, எத்தனை நபர்களுக்கு அன்ன தானம் வழங்க உத்தேசித்துள்ளனர் என்ற விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அன்னதானம் வழங்க விரும்புவோர் தங்களுக்கென அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில், அனுமதிக்கப்பட்ட தேதியில் அன்ன தானம் வழங்கி முடிக்க வேண்டும்.
    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. இலையாலான தொன்னை, பாக்கு மட்டைப் பொருள்களை மட்டுமே அன்ன தானம் வழங்க பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பாக்கெட் மூலம் குடிநீர் விநியோகிக்கக் கூடாது.
    அன்ன தானம் வழங்கும் இடத்திலேயே பக்தர்கள் உணவு சாப்பிட்டுவிட்டு, உணவுப் பொட்டலங்களை போட குப்பைக் கூடைகள் வைக்க வேண்டும். அன்னதானம் அளிக்க அனுமதி பெறாதவர்கள் அன்னதானம் வழங்கினால், காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    கடைகள் அமைக்க அனுமதி பெற வேண்டும்: இதேபோல, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அத்தியந்தல், ஆணாய்ப்பிறந்தான், ஆடையூர், அடிஅண்ணாமலை, வேங்கிக்கால் ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிரிவலப் பாதையில் தாற்காலிகக் கடைகள் அமைக்க உரிய முன் அனுமதி பெற வேண்டும்.
    முன் அனுமதி பெறாத கடைகள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தாற்காலிக கடைகளில் உணவு சமைக்கவும், எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு உருளைகள், விறகு அடுப்புகள், மண்ணெண்ணெய் அடுப்புகளை பயன்படுத்தவும், கற்பூரம் விற்கவும் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai