சுடச்சுட

    

    மதுக் கடைக்கு எதிராகப் போராட்டம்: 22 பேர் சிறையில் அடைப்பு

    By DIN  |   Published on : 02nd May 2017 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கீழ்பென்னாத்தூர் அருகே மதுக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீஸார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள மலப்பாம்பாடி, பன்னியம்பட்டு கிராமத்தில் புதிதாக மதுக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 30) மதுக் கடை எதிரே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென மதுக் கடையில் புகுந்து உள்ளே இருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை சாலையில் போட்டு உடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
    மேலும், திருவண்ணாமலை - சென்னை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, கீழ்பென்னாத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து மது பாட்டில்களை அடித்து நொறுக்கியதாக பள்ளியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், அருணாசலம், முத்தாலு, வெங்கடேசன், செல்வம் ஆகியோரை  கைது செய்தனர்.
    கைது செய்யப்பட்ட அனைவரும் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    விடுவிக்கக் கோரி சாலை மறியல்: இதனிடையே கைது செய்யப்பட்ட 5 பேரையும் விடுவிக்கக் கோரி, ஞாயிற்றுக்கிழமை இரவு திருவண்ணாமலை - சென்னை சாலையில் பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீஸார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
    அப்போது, கைது செய்யப்பட்ட 5 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும், இல்லையேல் எங்களையும் கைது செய்யுங்கள் என்று போலீஸாரிடம் கூறினார்.
    இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட மனோகர், மாரி, சண்முகம், தேவ அன்பு, ராமதாஸ், சதீஷ், செல்வராமு, ராமஜெயம், பொன்னுசாமி, அன்பழகன், சிவகாமி, உஷா, ரேவதி, சந்தியா உள்பட 17 பேரை போலீஸார் கைது செய்து, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திங்கள்கிழமை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai