சுடச்சுட

    

    அதிகரிக்கும் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 03rd May 2017 07:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம் ஒன்றியங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார்.
    வட்டாட்சியர் ஆர்.ரவி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் டி.ரமேஷ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.சுப்பிரமணியன், வேளாண் உதவி இயக்குநர் ஹரக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
    கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: திருவண்ணாமலை பூ சந்தைக்கு வாகனங்களில் விவசாயிகள் பூ கொண்டு வந்தால் வாகன தணிக்கை என்ற பெயரில் போலீஸார் கட்டணம் வசூலிக்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால், காட்டுப் பகுதியில் வன விலங்குகளுக்கு குடிநீர்த் தொட்டிகள் அமைக்க வேண்டும்.
    சாத்தனூர் அணையை தூர்வார வேண்டும். துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் குடிநீர்ப் பிரச்னை அதிகரித்துள்ளது. எனவே, குடிநீர்ப் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்பதில்லை.  இனிவரும் கூட்டங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றனர்.
    இதையடுத்து கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி பேசியதாவது: வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    தண்டராம்பட்டில்...: இதேபோல, தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு வட்டாட்சியர் சஜேஷ்பாபு தலைமை வகித்தார். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மகேந்திரமணி வரவேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசுகையில், தண்டராம்பட்டு, தரடாப்பட்டு, கரிப்பூர் ஏரிகளைத் தூர்வார வேண்டும். சேரந்தாங்கல் கிராமத்தில் முதியோர் உதவித்தொகை பெற்றுத் தர பணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
    தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றனர். இதற்குப் பதிலளித்துப் பேசிய வட்டாட்சியர் சஜேஷ்பாபு, விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் உரிய முறையில் பரிசீலித்து விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai