சுடச்சுட

    

    குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவண்ணாமலையை அடுத்த மேல்பாலானந்தல், செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம், மேல்புழுதியூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலையை அடுத்த மேல்பாலானந்தல் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து, துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் பல முறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
    இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலையில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மங்கலம் போலீஸார் மற்றும் துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசேகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஓரிரு நாளில் குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
    இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மேல்புழுதியூர், பக்கிரிபாளையம்: இதேபோல, செங்கத்தை அடுத்த மேல்புழுதியூர், பக்கிரிபாளையம் ஆகிய கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    எனவே, இந்தப் பகுதியில் உள்ள பழுதடைந்த ஆழ்துளை கிணறுகள், கைப்பம்புகள், குடிநீர் கிணறுகளை தூர்வார வேண்டும் 2 ஊராட்சி நிர்வாகத்திடமும் அந்தந்த கிராம மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தனராம்.
    எனினும், இந்த மனுக்களின் அடிப்படையில் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மேல்புழுதியூர், பக்கிரிபாளையம் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், காலிக் குடங்களுடன் செங்கம் - திருப்பத்தூர் சாலையில் உள்ள பக்கிரிபாளையம் கூட்டுச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    இதுகுறித்து தகவலறிந்த செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஷாஜித்தா, ஆணையாளர் கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், செங்கம் வட்டாட்சியர் உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    அப்போது, மேல்புழுதியூர், பக்கிரிபாளையம் ஆகிய 2 கிராமங்களுக்கும் செவ்வாய்க்கிழமை முதல் 5 டிராக்டர்கள் மூலம் ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும், இந்தக் கிராமங்களில் உள்ள பழுதடைந்த கைப்பம்புகள், ஆழ்துளை கிணறுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டு, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், மறியலில் ஈடுபட்ட 45 பேர் மீது செங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai