சுடச்சுட

    

    செங்கம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
    செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பிடத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தவர் தோக்கவாடி பகுதியைச் சேர்ந்த ரஜினி (40). இவரது குத்தகை காலம் முடிந்துவிட்டதால், கடந்த வாரம் மீண்டும் கட்டண கழிப்பிடம் ஏலம் விடப்பட்டது.
    இதில், செங்கம் செந்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த விஜயா ஏலம் எடுத்தார். இதையடுத்து, கடந்த 1-ஆம் தேதி கட்டண கழிப்பிட சாவியை அளிக்குமாறு ரஜினியிடம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் கேட்டுள்ளார். அதற்கு, ரஜினி சாவியை தர மறுத்ததுடன், நான் தான் கட்டண கழிப்பிடத்தை நடத்துவேன் என்று கூறி தகராறு செய்தாராம்.
    இதையடுத்து, ரஜினியும், அவரது உறவினர் மணிகண்டனும் (38) சேர்ந்து செயல் அலுவலர் ஆனந்தனை ஆபாசமாகத் திட்டியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து செங்கம் காவல் நிலையத்தில் ஆனந்தன் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ரஜினி, மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai