சுடச்சுட

    

    சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை மீண்டும் செயல்படுத்த  ஆலோசனை

    By DIN  |   Published on : 04th May 2017 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை மீண்டும் செயல்படுத்திட விவசாயிகளுடன் ஒழுங்குமுறை விற்பனைக் கூட செயலர் மாரியப்பன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
    சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் 224 பேரிடம் நெல் கொள்முதல் செய்ததற்கான பணம் ரூ.1.5 கோடியை வியாபாரி கார்த்தி, அவரது தம்பி கண்ணன், தந்தை சீனு ஆகியோர் மோசடி செய்தனராம். இதற்கு உடந்தையாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ராஜசேகரன் செயல்பட்டாராம்.
    பின்னர், விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த 100 நாள்களுக்கும் மேலாக சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்படவில்லை.
    இதனிடையே, நெல் கொள்முதல் பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரை விவசாயிகள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.
    மேலும், விவசாயிகளின் பணம் பட்டுவாடா செய்யப்படாமல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இயங்கக் கூடாது என விவசாயிகள் தினமும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை கண்காணித்து வருகின்றனர்.
    இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே உத்தரவின்பேரில், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூட செயலர் மாரியப்பன், விவசாயிகளுடன் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில், பாமகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ எதிரொலிமணியன், மாவட்டச் செயலர் வேலாயுதம், மாவட்டத் தலைவர் ஏழுமலை, மாவட்ட அமைப்புச் செயலர்கள் பிச்சைகண்ணு, சம்பத், விவசாயிகளின் பிரதிநிதி ஆவணியாபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கிடேசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    அப்போது, ஒழுங்குமுறை விற்பனைக் கூட செயலர் மாரியப்பன் பேசியதாவது: சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கடந்த 3 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் 30 நாள்களில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான பணம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் தொடர்ந்து செயல்பட விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
    இதையடுத்து, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் தொடர்ந்து செயல்பட ஒத்துழைப்பு அளிப்பதாக விவசாயிகள் உறுதியளித்தனர். எனினும், விவசாயிகளின் பணம் 30 நாள்களில் வழங்கப்படாவிடில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai