Enable Javscript for better performance
தனியார் பள்ளிகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் செல்வதைத் தடுக்க வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர- Dinamani

சுடச்சுட

    

    தனியார் பள்ளிகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் செல்வதைத் தடுக்க வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரை

    By DIN  |   Published on : 04th May 2017 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி  மாணவ,  மாணவிகள் தனியார் பள்ளிகளுக்குச் செல்வதை தடுப்பதுடன், அரசுப் பள்ளிகளிலேயே அவர்கள் தொடர்ந்து படிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.
    திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
    பின்னர், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி அவர் பேசியதாவது:
    திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் 10 முதல் 25 சதவீதம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்றபடி ஆங்கில வழி வகுப்புகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும்.
    பின்தங்கிய நிலையில் உள்ள தண்டராம்பட்டு, செங்கம், ஜவ்வாதுமலை, புதுப்பாளையம் ஒன்றியங்களில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள அரசுப் பள்ளிகளில் தாற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5 ஆயிரம் வீதம் வழங்குகிறோம். இந்தத் திட்டத்தை ஒன்றியங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.
    அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இருந்து வெளியேறும் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு செல்வதைத் தடுத்து நிறுத்தி, அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து படிப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, மோகன்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ஆறுமுகம், வேணுகோபால் உள்பட பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai