விஷம் வைத்து 300 வாத்துகள் சாகடிப்பு: இளைஞர் கைது
By DIN | Published on : 04th May 2017 08:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கடன் தகராறில் விஷம் வைத்து 300 வாத்துகளை சாகடித்ததாக இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
செய்யாறை அடுத்த நரசமங்கமலம் கிராமம், பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவர், வாத்துகளை மேய்த்தும், வியாபாரம் செய்தும் வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (24), வியாபாரி ராஜாமணியிடம் சில மாதங்களுக்கு முன்பு கடனாக ரூ.17 ஆயிரம் பெற்றாராம்.
பின்னர், ராஜாமணி பணத்தை திருப்பிக் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், நரசமங்கலத்துக்கு அருகே உள்ள மாமண்டூர் ஏரிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வாத்துகளை மேய விட்டுவிட்டு ராஜாமணி வீட்டுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு திரும்பியுள்ளார். அப்போது, அவரைப் பார்த்ததும், ஏரிப் பகுதியில் இருந்து கிருஷ்ணன் ஓட்டம் பிடித்தாராம்.
இதனால் சந்தேகமடைந்த ராஜாமணி, ஏரிப் பகுதியில் சென்று பார்த்தபோது, அவர் மேய்ச்சலுக்கு விட்டிருந்த சுமார் 300 வாத்துகள் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. மேலும், அந்தப் பகுதியில் விஷம் கலந்த நெல் இருந்ததும், அவற்றை வாத்துகளுக்கு கொடுத்து சாகடிக்கப்பட்டதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து தூசி காவல் நிலையத்தில் ராஜாமணி புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.