Enable Javscript for better performance
செண்பகதோப்பு அணையில் சேற்றில் சிக்கி பலியாகும் கால்நடைகள்- Dinamani

சுடச்சுட

    

    செண்பகதோப்பு அணையில் சேற்றில் சிக்கி பலியாகும் கால்நடைகள்

    By DIN  |   Published on : 05th May 2017 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போளூரை அடுத்த படவேடு அருகே உள்ள செண்பகதோப்பு அணையில் தண்ணீர் குடிக்கச் செல்லும் கால்நடைகள் சேற்றில் சிக்கி பலியாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே, அணையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
    போளூரை அடுத்த கானமலை ஊராட்சியைச் சேர்ந்தது செண்பகதோப்பு கிராமம். ஜவ்வாது மலைத்தொடரில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டு போளூர் தொகுதி எம்எல்ஏ நிதியில் இருந்து ரூ.34 கோடியில் செண்பகதோப்பு அணை கட்டப்பட்டது.
    ஜவ்வாதுமலையில் பெய்து வீணாகும் மழைநீரை சேகரிக்கும் வகையில் படவேடு அருகே கட்டப்பட்ட இந்த அணையில் 287 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்கலாம். படவேடு பகுதியில் உள்ள 46 ஏரிகள் நிரம்பும் வகையிலும், 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும் வகையிலும் இந்த அணை அமைக்கப்பட்டது.
    தற்போது கோடை காலம் என்பதால், இந்தப் பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக அணைப் பகுதிக்கு ஓட்டிச் செல்கின்றனர். பின்னர், தண்ணீர் குடிக்க கால்நடைகளை அணைக்குள் விடுகின்றனர்.
    தற்போது அணையில் தண்ணீர் குறைவாக உள்ள நிலையில், தண்ணீரை ஒட்டிய பகுதி சேறும், சகதியுமாக கடுமையான ஆழத்துடன் காணப்படுகிறது. இதனால் தண்ணீர் குடிக்க வரும் கால்நடைகள், சேற்றில் சிக்கி வெளியேற முடியாமல் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் தண்ணீர் குடிக்கும்போது சேற்றில் சிக்கி பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அணையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai