சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வெள்ளிக்கிழமை கிணற்றை தூர்வாரியபோது, மண் சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    புதுப்பாளையம் ஒன்றியம், தேவனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஏழுமலை. அந்தக் கிராமத்தில் உள்ள இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் 60 அடி ஆழமுள்ள கிணற்றைத் தூர்வாரும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இந்தப் பணியில் 11 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இவர்களில் 3 தொழிலாளர்கள் கிணற்றுக்குள் வெடி வைப்பதற்காக துளையிட்டு, தோட்டாக்களை வைக்கும் பணியில்  ஈடுபட்டிருந்தனர்.
    அப்போது, திடீரென 10 அடி உயர மண் சரிந்து விழுந்ததில் தோட்டாக்களை வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பனைஓலைப்பாடி கிராமம் சுரேஷ் (25), நாகப்பாடி கிராமம் சுதாகர் (25), பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமம் முனியப்பன் (27) ஆகியோர் மண்ணுக்குள் புதைந்தனர்.
    இதைப் பார்த்ததும் கிணற்றின் மேலிருந்த மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இதைத் தொடர்ந்து, அங்கு வந்த கிராம மக்கள், உடனடியாக தீயணைப்புத் துறை, காவல் துறை, வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    இதையடுத்து, செங்கம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மண்ணில் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
    மேலும், கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஷாஜித்தா, வட்டாட்சியர் உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
    சுமார் இரண்டரை மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, மண்ணுக்குள் புதைந்த 3 தொழிலாளர்களும் சடலங்களாக மீட்கப்பட்டனர். அவர்களது சடலங்கள் உடல்கூறு பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
    இதுகுறித்து, புதுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai