Enable Javscript for better performance
கூடுதல் விலை, காலாவதியான பொருள்கள் விற்பனை: புதிய செயலி மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    கூடுதல் விலை, காலாவதியான பொருள்கள் விற்பனை: புதிய செயலி மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

    By DIN  |   Published on : 06th May 2017 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடுதல் விலை, காலாவதியான பொருள்கள் விற்பனை குறித்து தொழிலாளர் நலத் துறையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய செயலியைப் பயன்படுத்தி பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று நுகர்வோர் கூட்டமைப்பு நிர்வாகி ப.கி.தனஞ்செயன் கூறினார்.
    திருவண்ணாமலை மாவட்ட நியூஸ் கூட்டமைப்பு, பெட்காட் அமைப்பு ஆகியவை இணைந்து நுகர்வோருக்கான விழிப்புணர்வு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. திருவண்ணாமலை ரீடு தொண்டு நிறுவனத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நுகர்வோர் கூட்டமைப்பின் பெட்காட் மாவட்டச் செயலரும், வழக்குரைஞருமான ப.கி.தனஞ்செயன் தலைமை வகித்தார்.
    பள்ளித் தாளாளர் தர்ஷினி, முதல்வர் சுஜிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி செங்கம் குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில், நுகர்வோர் பயன்பெறும் வகையில் தொழிலாளர் நலத் துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
    இதைத் தொடர்ந்து,  நுகர்வோர்  கூட்டமைப்பின் பெட்காட் மாவட்டச் செயலர் ப.கி.தனஞ்செயன் பேசியதாவது:
    எந்தவொரு பொருளை வாங்கினாலும் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. பொருள் அடைக்கப்பட்டுள்ள பொட்டலத்தின் மீது எடையளவு, பொருளின் தயாரிப்புத் தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்தால் புதிய செயலி மூலம் தங்களது செல்லிடப்பேசியில் உடனே விடியோ எடுத்து சம்பந்தப்பட்ட கடைக்காரர் மீது தொழிலாளர் நலத் துறையில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
    கூடுதல் விலைக்கு பொருள்களை விற்பது, காலாவதியான பொருள்களை விற்பது குறித்தும் இந்த செயலி மூலம் தொழிலாளர் நலத் துறை செயலர், தொழிலாளர் நலத் துறை ஆணையர், சம்பந்தப்பட்ட தொழிலாளர் நல அலுவலர், தொழிலாளர் நல ஆய்வாளர் வரை இந்த செயலி மூலம் புகார் அனுப்ப முடியும்.
    எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த புதிய செயலியை தொழிலாளர் நலத் துறையின் இணையதளத்தில் இருந்து தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றார்.
    நிகழ்ச்சியில், மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், அருணாச்சலா மெடிக்கல் இன்ஸ்டிடியூட் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai