சுடச்சுட

    

    சேத்துப்பட்டில் உழவர் சந்தை அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

    By DIN  |   Published on : 08th May 2017 07:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயிகள் தங்கள் வேளாண் பொருள்களை சிரமமின்றி விற்பனை செய்யும் வகையில், சேத்துப்பட்டு பேரூராட்சியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
    லூர்து நகர், நிர்மலா நகர், பழம்பேட்டை, சேத்துப்பட்டு, கண்ணணூர் உள்ளிட்ட பல பகுதிகளை உள்ளடக்கியது சேத்துப்பட்டு பேரூராட்சி. இங்கு மொத்தமுள்ள 18 வார்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், சேத்துப்பட்டு வட்டமாகவும் உள்ளது.
    சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 49 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. சேத்துப்பட்டு நகரில் போக்குவரத்து பணிமனை, தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை, தனியார், அரசு வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள், அனைத்து வசதிகளுடன் கூடிய காமராஜர் பேருந்து நிலையம், 500-க்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை உள்ளன.
    எனினும், இங்கு காய்கனி சந்தை, பூ சந்தை, இறைச்சி சந்தை உள்ளிட்டவை இல்லாதது சேத்துப்பட்டு மக்களுக்கு பெரிய ஏமாற்றமாக உள்ளது.
    சேத்துப்பட்டை சுற்றியுள்ள கிராம மக்களின் முக்கிய தொழில் விவசாயம். இந்தப் பகுதி விவசாயிகள், தோட்டப்பயிராக காய்கனிகள், கீரைகளை பயிரிடுகின்றனர். எனினும், இவற்றை விற்பனை செய்ய உழவர் சந்தை இல்லாததால், ஆரணி சந்தைக்கு கொண்டு சென்று குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
    சில விவசாயிகள் சேத்துப்பட்டில் உள்ள முக்கிய வீதிகளான வந்தவாசி சாலை, போளூர் சாலை, செஞ்சி சாலை, ஆரணி சாலைகளின் ஓரங்களிலும், கடைகளின் முன்பும் காய்கனிகளை வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், சாலையோர கடை அமைத்து வியாபாரம் செய்யும் விவசாயிகள் விபத்தை சந்திக்கும் சூழலும் ஏற்படுகிறது.
    சேத்துப்பட்டில் சாலையோர கடைகளை தடுக்க காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், நாளுக்கு நாள் இந்தக் கடைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடைகளின் முன் சாலையோரமாக பொருள்களை வைத்து விற்பனை செய்யும் விவசாயிகளிடம் கடை வியாபாரிகள் தினசரி வசூலில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
    எனவே, விவசாயிகள் தங்கள் வேளாண் பொருள்களை சிரமமின்றி விற்பனை செய்யும் வகையில், சேத்துப்பட்டு பேரூராட்சியில் உழவர் சந்தை அமைக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் மனு அளிக்கப்பட்டது.
    மேலும், சேத்துப்பட்டில் உள்ள ஆரணி சாலையின் பின்புறம் பேரூராட்சி சார்பில் பல கடைகள் கட்டப்பட்டு யாருக்கும் பலனளிக்காத வகையில் பழுதடைந்த நிலையில் உள்ளன.
    இவற்றை சீரமைத்துக் கொடுத்தால் விவசாயிகள் பயன்பெறுவர்.
    எனவே, இந்தக் கடைகளை சீரமைக்கவும், சேத்துப்பட்டில் உழவர் சந்தை அமைக்கவும், பேரூராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai