சுடச்சுட

  

  இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்: திருச்சி சிவா பேச்சு

  By DIN  |   Published on : 09th May 2017 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக மக்கள் இந்தி படிப்பதை நாம் எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பதைத் தான் எதிர்க்கிறோம் என்று திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி என்.சிவா பேசினார்.
  திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில் இந்தித் திணிப்பை எதிர்த்தும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரியும் கருத்தரங்கம் நடைபெற்றது.
  திருவண்ணாமலை தனியார் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்குக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான எ.வ.வேலு தலைமை வகித்தார்.  திமுக தணிக்கைக் குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி வரவேற்றார்.
  திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி என்.சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழகத்தில் இந்தி திணிப்பு குறித்த கருத்துகளை வழங்கிப் பேசினார். திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன், நீட் தேர்வு குறித்த கருத்துகளை வழங்கிப் பேசினார்.
  கருத்தரங்கில் திருச்சி என்.சிவா பேசுகையில், தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து நாம் போராட வேண்டும். இந்தி படிப்பதை நாம் எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பைத் தான் எதிர்க்கிறோம். நம் தாய்மொழியைக் காக்க வேண்டும்.
  கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, முன்தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி. அப்படி இருக்க 400 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இந்தியைத் திணிப்பது எந்த வகையில் நியாயம் என்றார்.
  கருத்தரங்கில், வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலாளர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், நகரச் செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, நகராட்சி குழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி, அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், வழக்குரைஞர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai