சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சித்திரை வசந்த உற்சவத்தின் 10-வது நாளான திங்கள்கிழமை, அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
     இந்தக் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் ஏப்ரல் 29-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை, மாலை வேளைகளில் மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்று வந்தன.
    மேலும், தினமும் இரவு வேளைகளில் கோயில் மூன்றாம் பிரகாரத்தை உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். தல விருட்சமான மகிழ மரம் அருகே வரும்போது உற்சவருக்கு, குழந்தை பொம்மை பூ கொட்டும் நிகழ்வும் நடைபெற்று வந்தது.
    அய்யங்குளத்தில் தீர்த்தவாரி: விழாவின் 10-வது நாளான திங்கள்கிழமை காலை 8 மணிக்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக, உற்சவர் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தியம்மன் ஆகியோர் கோயிலில் இருந்து புறப்பட்டு அய்யங்குளத்துக்குச் சென்றனர்.
    பின்னர், குளக்கரையில் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
    தொடர்ந்து, சூலம் வடிவிலான அருணாசலேஸ்வரரை சிவாச்சாரியர்கள் கையில் ஏந்திச் சென்று குளத்தில் வைத்து பூஜைகள் நடத்தினர். பின்னர், தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
     திங்கள்கிழமை இரவு ஸ்ரீகோபால விநாயகர் கோயிலில் மண்டகப்படி நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு கோயில் கொடிமரம் எதிரே மன்மதனை தகனம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.
    ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள், உபயதாரர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai