சுடச்சுட

    

    செய்யாறை அடுத்த முக்கூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
     இந்நிகழ்ச்சிக்கு ஆரணி எம்.பி. செஞ்சி வெ.ஏழுமலை, செய்யாறு எம்எல்ஏ தூசி.கே.மோகன் முன்னிலை வகித்தனர். செய்யாறு சார்-ஆட்சியர் த.பிரபுசங்கர் வரவேற்றார்.
     சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர்.எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்று புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார்.
    அப்போது அவர் பேசியதாவது:
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது 89 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 6 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 40 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 3 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.
     மேலும், முக்கூர் கிராமத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டுவதற்கு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் பாராசூர், நாவல், மதுரை, கழனிப்பாக்கம், வாழ்குடை, மாளிகைப்பட்டு, அகத்தேரிப்பட்டு, முக்கூர், எரையூர், குழாம்பாடி, தொழுப்பேடு உள்பட 11 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள் என்றார்.
    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்யாறு சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வி.கோவிந்தன் மற்றும் சுகாதாரத் துறையினர் செய்திருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai