Enable Javscript for better performance
சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்- Dinamani

சுடச்சுட

    

    சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

    By DIN  |   Published on : 11th May 2017 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சித்ரா பெளர்ணமி திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் புதன்கிழமை அதிகாலை முதல் வியாழக்கிழமை காலை வரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம்
    செய்தனர்.
    சித்ரா பெளர்ணமி தினத்தில் திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலையில் வாசம் செய்யும் சித்தர்கள் பலர் 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையை வலம் வருவதாக ஐதீகம்.
    எனவே, ஆண்டுதோறும் சித்ரா பெளர்ணமி தினத்தில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து, சுவாமியை வழிபட்டுச் செல்கின்றனர்.
    சித்ரா பெளர்ணமி கிரிவல நேரம்:  இந்த ஆண்டு சித்ரா பெளர்ணமி புதன்கிழமை அதிகாலை 1.50 மணிக்குத் தொடங்கி, வியாழக்கிழமை அதிகாலை 3.31 மணிக்கு முடிவடைந்தது. எனவே, பக்தர்கள் இந்த நேரத்தில் கிரிவலம் வரலாம். எனினும், மே 10-ஆம் தேதி முழுமையான சித்ரா பெளர்ணமி தினம் என்று ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்தது.
    ஆனால், செவ்வாய்க்கிழமை மாலை முதலே திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர். தொடர்ந்து, புதன்கிழமை காலை வரை விடிய விடிய பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    புதன்கிழமை அதிகாலை முதல் பகல் 12 மணி வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். இதன்பிறகு நகரில் வெயிலின் தாக்கம் அதிகமானதால், கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.
    பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்: மீண்டும் பிற்பகல் 3 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மாலை 6 மணி முதல் திருவண்ணாமலை நகரத் தெருக்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. தொடர்ந்து, வியாழக்கிழமை அதிகாலை வரை சுமார் 16 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
    அருணாசலேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ராஜகோபுரம் வழியாகப் பொது தரிசன பக்தர்களும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகக் கட்டண தரிசன பக்தர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
    அம்மணி அம்மன் கோபுரம் வழியாகச் சென்ற பக்தர்கள் தரிசனம் செய்ய 3 முதல் 4 மணி நேரமானது. ராஜகோபுரம் வழியாக சுவாமி தரிசனம் செய்ய 5 முதல் 6 மணி நேரமானது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai