திருட்டைத் தடுக்கும் புதிய செயலி கண்டுபிடிப்பு
By DIN | Published on : 11th May 2017 06:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வீடுகளில் நடைபெறும் திருட்டைத் தடுக்கும் வகையில் புதிய ஆண்ட்ராய்டு செயலியை (Android app) ஆரணியைச் சேர்ந்த பொறியாளர் ஜெயக்குமார் கண்டுபிடித்து காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ளார்.
இன்றைய கால கட்டத்தில் வீட்டைப் பூட்டிவிட்டு, வெளியூருக்குச் செல்லும் பெரும்பாலோனோர் வீடுகளில் நகை, பணம் திருடப்படுகிறது.
வீட்டில் கண்காணிப்பு கேமரா இருந்தாலும், திருடர்கள் திருடிச் சென்ற பிறகுதான் அதனைப் பார்த்து நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால், திருடர்கள் வீட்டுக்குள் நுழையும்போதே நாம் எங்கு இருந்தாலும் நமது செல்லிடப்பேசியில் அலாரம் அடிக்கும் வசதி மற்றும் வீட்டுக்குள் நுழையும் திருடர்களை அதில் பார்க்கும் வசதிகள் கொண்ட ஆண்ட்ராய்டு செயலியை ஆரணியைச் சேர்ந்த பொறியாளர் ஜெயக்குமார் கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து பொறியாளர் ஜெயக்குமார் கூறியதாவது: இந்த ஆண்ட்ராய்டு செயலி மூலம் நாம் வீட்டைப் பூட்டிக்கொண்டு இந்தியாவில் எங்கு சென்றாலும், திருடர்கள் வீட்டில் நுழைந்தால் நமது செல்லிடப்பேசியில் அலாரம் அடிக்கும். இதற்காக வீட்டில் ஒரு ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசியை வைத்திருக்க வேண்டும்.
நாம் அந்த செல்லிடப்பேசிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் வீட்டிலுள்ள அனைத்து விளக்குகளும் எரியும். மற்றொரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் அலாரம் அடிக்கும். இதனால், அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்க்கக்கூடிய சூழல் உருவாகும். திருடர்களை எளிதில் பிடித்துவிடலாம்.
மேலும், நகை, பணம் இருக்கும் இடத்தில் வீடியோ கேமராவை அமைத்திருந்தால் அந்த இடத்துக்கு திருடர்கள் செல்லும்போது, நமது செல்லிடப்பேசியில் அவர்களைப் பார்க்க முடியும். உடனடியாக அந்தப் பகுதி போலீஸாருக்கு தகவல் கொடுத்தால் திருடர்களைப் பிடித்து விடலாம். இந்த ஆண்ட்ராய்டு செயலிக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளேன். அவர்கள் ஆராய்ச்சி விவரங்களைக் கேட்டிருந்தனர்.
அதன் விவரங்களையும் ஒப்படைத்துள்ளேன் என்றார் ஜெயக்குமார்.