சுடச்சுட

  

  வந்தவாசி அருகே சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக தெள்ளாறு பகுதி வேளாண் உதவி அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
  வந்தவாசியை அடுத்த குணங்கம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அதிமுக ஊராட்சிச் செயலர் கனகராஜ் (50). இவர், தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சொட்டு நீர்ப் பாசனம் அமைத்துத் தருமாறு தெள்ளார் வேளாண் உதவி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாராம்.
  இரண்டரை ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கத் தேவையான பைப், மின் மோட்டார் உள்ளிட்ட அனைத்துக்கும் திட்ட மதிப்பீடாக ரூ. 31,600 நிர்ணயிக்கப்பட்டது. சொட்டு நீர்ப் பாசனம் 100 சதவீத அரசு மானியத்தில் அமைக்கப்படுகிறது.
  ஆனால், இதற்காக தனக்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று தெள்ளார் பகுதி வேளாண் உதவி அலுவலராகப் பணியாற்றும் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த குமார் (37) கூறினாராம்.
  இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீஸில் கனகராஜ் புகார் அளித்தார். இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை போலீஸார் கனகராஜிடம் கொடுத்து அனுப்பினர். தெள்ளார் வேளாண் அலுவலகத்தில் இருந்த குமாரிடம், போலீஸார் கொடுத்து அனுப்பிய ரூபாய் நோட்டுகளை கனகராஜ் கொடுத்தார்.
  பணத்தைப் பெற்றுக் கொண்ட குமாரை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. சரவணக்குமார் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
  கைது செய்யப்பட்ட குமார், திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai