Enable Javscript for better performance
வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
    திருவண்ணாமலை வட்டம், மங்கலத்தை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்த் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    அதன்படி, நிகழாண்டுத் திருவிழா ஏப்ரல் 22-ஆம் தேதி மகாபாரதத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியுடன் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி: விழாவின் ஒரு பகுதியாக மும்பை, சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகள் பங்கேற்ற அழகிப் போட்டி நடைபெற்றது. இதில், ஏராளமான திருநங்கைகள் பங்கேற்று ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை மகிழ்வித்தனர். பின்னர், பெண் அழைப்பு, திருநங்கைகளுக்கான திருமணச் சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    தேர்த் திருவிழா கோலாகலம்: திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீ கூத்தாண்டவர் தேரோட்டம் புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கூத்தாண்டவர், ஸ்ரீ காமாட்சியம்மனுக்கு அதிகாலை 6 மணியளவில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளான ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கூத்தாண்டவர், ஸ்ரீ காமாட்சியம்மனை மலர்களால் அலங்கரித்து, தேர்களில் வைக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
    காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. விநாயகர் தேர், கூத்தாண்டவர் தேர், காமாட்சியம்மன் தேர் என 3 தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக வீதி உலா வந்தன. மங்கலம் கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்த தேரோட்டத்தை திரளான பக்தர்கள் கண்டு களித்தனர். பக்தர்கள் பலர் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடனைச் செலுத்தி, வழிபட்டனர்.
    இதனைத் தொடர்ந்து, இரவு திருநங்கைகளின் தாலிகளை அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவர் எல்.சதானந்தம், கோயில் தர்மகர்த்தா பழனிவேல், நிர்வாகிகள் என்.பச்சையப்பன், பி.ராஜாராம், வி.தண்டபாணி, வி.பெருமாள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai